நாமக்கல், நவ.5: நாமக்கல் மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேளாண் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பயிர் சாகுபடிக்காக 8,416 டன் உரம் கையிருப்பு உள்ளது. அதனை பெற்று விவசாயிகள் பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளது. மாவட்டத்தில் காவிரி ஆறு பாய்ந்தோடினாலும், பெரும்பாலான விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. பருவமழையை எதிர்பார்த்தே விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்கின்றனர். பருவமழை பொய்க்கும் காலங்களில் கோழிப்பண்ணை, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி, வருவாய் ஈட்டுவதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். எல்நினோ தாக்குதலால் நடப்பு சாகுபடி பருவத்தில், தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை. எல்நினோ சூப்பர் எல்நினோவாக மாறியதால், விவசாயம் அடியோடு பாதித்தது. தற்போது, வடகிழக்கு பருவமழை ஓரளவுக்கு பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து வேளாண் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதாக கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 254 தனியார் உர விற்பனை மையங்கள் மற்றும் 171 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதன் மூலம் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து வகை உரங்களும் விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரம் 2,118 டன், டி.ஏ.பி 1,406 டன், பொட்டாஷ் 950 டன், சூப்பர் பாஸ்பேட் 263 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 3,679 மெட்ரிக் டன் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனைத்து வகை உரங்களையும், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பெற்று கொள்ளலாம். மேலும், விவசாயிகள் மண் ஆய்வு செய்து அதற்கேற்ப உரங்களை பயன்படுத்தலாம். இல்லையெனில், தமிழ் மண்வளம் செயலியில் உள்ள பரிந்துரைக்கேற்ப உரங்களை பயன்படுத்தியும் அதிக மகசூல் பெறலாம்.
உர விற்பனையாளர்கள் கொள்முதல் செய்யக்கூடிய அனைத்து வகை உரங்களையும், குறிப்பாக யூரியா உரங்களை, விவசாயிகளின் தேவைக்கு தகுந்தாற்போல், அவர்களின் ஆதார் எண்ணை உள்ளீட்டு விநியோகம் செய்யலாம். விற்பனையாளர்கள் உர விற்பனை மேற்கொள்ளும் போது, மிக கவனமாக பட்டியலிட்டு விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதலாக விற்பனை செய்தல், உர உரிமம் இல்லாத இடத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்தல், யூரியா கடத்தல்-பதுக்கல் மற்றும் முறையற்ற தன்மையில் பட்டியலிடுதல் போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக உர விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உர விற்பனை நிலையத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


