பரமத்திவேலூர், நவ.4: நாமக்கல் அருகே 40 சந்தன மரங்களை வெட்டி கடத்திய சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்துள்ள கோணூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியண்ணன். விவசாயி. இவரது தோட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஏக்கர் பரப்பில் 1300 சந்தன மரம் நடவு செய்து பராமரித்து வருகிறார். இதுதொடர்பாக வனத்துறை மற்றும் வருவாய்த்துறையில் பதிவு செய்துள்ளார். மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, சந்தன மர தோட்டத்தில் இருந்த நன்கு வளர்ந்து, தடிமனாக இருந்த 40க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவம் குறித்து பரமத்தி போலீசில் காளியண்ணன் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய நிலத்தில் வளர்த்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


