சேந்தமங்கலம், நவ.4: நாமக்கல் அருகே ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு டூவீலரில் தப்பிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே, ஏளூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி தனம்(66). நேற்று முன்தினம் மாலை, ஏளூர் வளைவு பகுதியில் ஒரு வீட்டில் பேசி விட்டு தனம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள், திடீரென தனம் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொ) அந்தோணி மைக்கேல் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வந்தார்.
தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களில், பதிவான காட்சிகளை வைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். இதில், ஈரோடு மாவட்டம், சிவகிரி சடையபுரம் பழனிசாமி மகன் கௌசிக்(24), நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கடைவீதி லோகநாதன் மகன் விக்னேஷ்(26) ஆகியோர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும், தற்போது நாமக்கல் அடுத்த கெண்டிசெட்டிப்பட்டி குறிஞ்சி நகரில் விக்னேஷ் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை விக்னேஷ் வீட்டை போலீசார் சுற்றிவளைத்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த விக்னேஷை மடக்கினர். மேலும், உடனிருந்த கௌசிக்கையும் தனிப்படை போலீசார் பிடித்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர். நகை பறிப்பு நடந்த 12 மணி நேரத்திற்குள் தனிப்படை போலீசார் 2 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


