நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி பகுதியில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மோகனூர், ஜேடர்பாளையம் காவிரியில் மேயர் நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாநகராட்சி பகுதியில், 39 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. மோகனூர் காவிரி, ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் உள்ள குடிநீர் திட்டங்கள் மூலம், மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் விநியோகத்தை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
மோகனூர் காவிரி ஆற்றில், தண்ணீர் வரத்து குறைந்துவிட்டதால், மாநகராட்சி குடிநீர் திட்ட கிணறுகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால், மாநகரில் கடந்த ஒரு வாரமாக சீரான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம், காவிரி ஆற்றில் உள்ள பேட்டபாளையம் பகுதியில் இருந்து ஆற்றில் தனியாக கரை அமைத்து, தண்ணீரை குடிநீர் திட்ட நீர் உறிஞ்சும் கிணறுகளுக்கு திருப்பிவிடும் பணியை மேற்கொண்டுள்ளது. கடந்த 4 நாட்களாக இப்பணி மோகனூர் காவிரி ஆற்றில் நடந்து வருகிறது. மாநகர மேயர் கலாநிதி, இப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து ஜேடர்பாளையம் காவிரி ஆற்றுக்குசென்று, அங்குள்ள குடிநீர் திட்டத்திற்கு ஆற்றில் இருந்து தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்கிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் திட்ட பணியாளர்களிடம், மின்மோட்டார்களை எப்போதும் நல்ல நிலையில் வைத்திருக்கும்படி மேயர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், டிடிசரவணன், தேவராஜன், கிருஷ்ணமூர்த்தி, மின்கண்காணிப்பாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து மேயர் கலாநிதி கூறுகையில், நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோகனூர் காவிரி ஆற்றில், தற்போது கரை அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. தற்போது தினமும் 95 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. வழக்கமாக 1.22 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் பெறப்பட்டு வந்தது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், பெறப்படும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. அதை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரையை அகலமாக கட்டுவதன் மூலம் 6 மாத காலத்திற்கு குடிநீர் பிரச்னை வராது. ஜேடர்பாளையம் குடிநீர் திட்டம் மூலம் தேவையான தண்ணீர் தற்போது பெறப்பட்டு வருகிறது. அங்கு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது என்றார்.


