Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நிறைவில் பயனாளிகளுக்கு நலஉதவிகள்: கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்

சேந்தமங்கலம், ஆக.4: கொல்லிமலை வல்வில் ஓரி நிறைவு விழாவில், 166 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வல்வில் ஓரி விழா நிறைவையொட்டி, நேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில், கலெக்டர் மதுபாலன், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்.சந்திரசேகர் கலந்து கொண்டு, 166 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மேலும், தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூருவை சேர்ந்த ஆஷ்ரயா அங்குசி அணிக்கு வெற்றி கோப்பை, பரிசு தொகை வழங்கினர். மேலும், காவல்துறை அரங்கத்திற்கு முதல் பரிசும், கல்வித்துறை அரங்கத்திற்கு 2ம் பரிசும், மின்சார வாரியத்துறை அரங்கத்திற்கு 3ம் பரிசும் வழங்கினர். முன்னதாக கலெக்டர் மதுபாலன், தாவரவியல் பூங்காவில் அமைக்கப் பட்டிருந்த மலர் கண்காட்சி, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்லுயிர் கண்காட்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழா நிறைவையொட்டி, வல்வில் ஓரி சிலைக்கு, நேற்று அரசியல் கட்சிகள் சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரபாகரன், தாசில்தார் கோபி, கொல்லிமலை வன சரகர் முருகன், பிடிஓ ஈஸ்வரன், பிஆர்ஓ சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பதவி பறிபோகும் சென்டிமென்ட்டால்

விழாவை புறக்கணித்த 3 அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் வல்வில் ஓரிவிழா ெகாண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். இவ்விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு நேற்று முன்தினமும், நேற்றும் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக் கான அழைப்பிதழ் இந்த ஆண்டு அச்சிடப்படவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் தவெக அரசு சார்பில், அமைச்சர்களாக அருண்ராஜ், விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உள்ளனர். ஆனால், வல்வில் ஓரி விழாவில் இவர்கள் 3 பேரும் கலந்து கொள்ளவில்லை. வல்வில் ஓரி விழாவில் கலந்து கொண்டால், அமைச்சர் பதவி பறிபோகும் என்ற சென்டிமென்ட், நீண்ட காலமாக அரசியல் கட்சிகளிடையே இருந்து வருகிறது.

இந்நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் விஜய், வல்வில் ஓரி விழாவில் தனது அமைச்சர்களை கலந்து கொள்ள வைத்து, தங்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பார் என்று மலைவாழ் மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், கடந்த இரு நாட்களாக நடந்த விழாவில், தொகுதி எம்எல்ஏ மட்டுமே கலந்து கொண்டார். மூன்று அமைச்சர்களும் வல்வில் ஓரி விழாவை புறக்கணித்து விட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த மலர் கண்காட்சி தொடக்க விழாவிலும், அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. நேற்று நிறைவு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் கலந்து கொள்ளவில்லை. ஆண்டுதோறும் வல்வில் ஓரி நிறைவு விழா ஆடிப்பெருக்கு தினம் என்பதால், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள். ஆனால், நேற்று விழா அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. பெயரளவுக்கு வல்வில் ஓரி விழா நடந்ததாக மலைவாழ் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.