சேந்தமங்கலம், நவ.3: தொடர் மழையின் காரணமாக, கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக கொல்லிமலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வனப்பகுதியில் இருந்து காட்டாறுகளின் மூலம் வெளியேறும் தண்ணீர் முழுவதும் நீர் வழி ஓடை பகுதி வழியாக அடிவாரம் காரவள்ளி பகுதியில் உள்ள ஆறுகளுக்கு பெருக்கெடுத்து வருகிறது. அடிவாரம் நீர் வழி ஓடை பகுதிகளில் நீரை சேமித்து வைக்கும் வகையிலும், கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதற்காக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் முழுவதும் தற்போது நிரம்பி வழிகின்றது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், `அடிவாரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து தடுப்பணைகளும், கொல்லிமலையில் பெய்த மழையின் காரணமாக தற்போது நிரம்பி வழிகிறது. இதனால் இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாக்கு நடவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் பாக்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதிய மழை இல்லாதால் கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனது. இதனால், பாக்கு மரங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. விளைச்சல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில், கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்துள்ளது. மேலும், அடிவார சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளதால் தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. 6 மாதத்துக்கான தண்ணீர் தேவை பூர்த்தியாகி உள்ளது,’ என்றனர்.


