குமாரபாளையம், நவ.3: குமாரபாளையம் அருகே, வாரச்சீட்டு நடத்தி ரூ.14 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவானவர், 3 ஆண்டுக்கு பின்பு கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கத்தேரி சாமியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர்(40). இவர் வாரச்சீட்டு நடத்தி வந்தார். துவக்கத்தில் ஏலம் எடுத்தவர்களுக்கு நம்பிக்கையாக பணத்தை திருப்பி கொடுத்தார். இதனால், ஏராளமானோர் இவரிடம் சீட்டு கட்டி வந்தனர். இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு தீபாவளி சமயத்தில், சங்கர் குடும்பத்தோடு ஊரை விட்டு ஓடி விட்டார்.
இதனால், சீட்டு போட்டு வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த மோசடி சம்பவத்தில் 130 நபர்களிடமிருந்து, 14 லட்சம் ரூபாயை அவர் ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து தலைமறைவான சங்கரை போலீசார் தேடி வந்தனர். கடந்த 3 வருடங்களாக ஓசூரில் தலைமறைவாக இருந்த சங்கர், தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு சாமியம்பாளையம் வந்துள்ளார். இதையறிந்த பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், சம்பவ இடம் விரைந்த வெப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சங்கரை கைது செய்தார். பின்னர், குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி விசாரித்து சங்கரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.


