Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆசிரியர் சிறப்பு தகுதித்தேர்வு நாளை துவக்கம்

நாமக்கல், ஜூலை 3: நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் சிறப்பு தகுதித்தேர்வு நாளை துவங்கும் நிலையில், முன்னேற்பாடுகள் குறித்து இணை இயக்குனர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கான, ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு நாளை மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இத்தேர்விற்கான விண்ணப்ப பதிவு, பிப்ரவரி இறுதியில் துவங்கி ஏப்ரல் மாதம் 10ம் தேதி நிறைவடைந்தது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை (4ம் தேதி) நடைபெறும் ஆசிரியர் தகுதிதேர்வினை 1162 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 5ம் தேதி நடைபெறும் தகுதித்தேர்வினை 3773 பேரும் என மொத்தம் 4935 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படுகிறது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு, காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் கட்டாயம் வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான முன்னேற்பாடுகள் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்விற்கான கேள்வித்தாள் நாமக்கல் கொண்டு வரப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர்களாக, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்களாக முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு போலவே ஆசிரியர் தகுதி தேர்வு கடுமையான விதிமுறைகளுடன் நடத்தப்படுகிறது. மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்க உதவி கலெக்டர் நிலையிலான அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான வழித்தட அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வுகள் நாளை துவங்க உள்ள நிலையில், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், நேற்று நாமக்கல் டிரினிடி கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் முருகன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். தேர்வு பணியில் ஈடுபடும் அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வின் போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினார். இந்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட கல்வி அலுவலர் புருசோத்தமன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அப்துல்வகாப், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.