Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 98 கி.மீ தூரத்திற்கு மட்டுமே பாதாள சாக்கடை பணி நிறைவு

நாமக்கல், ஜூலை 2: நாமக்கல் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், 98 கி.மீ தூரத்திற்கு மட்டுமே நிறைவு பெற்றுள்ளதால், மீதமுள்ள பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நாமக்கல் நகராட்சியாக இருந்தபோது, கொண்டிசெட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், முதலைப்பட்டி, சின்னமுதலைப்பட்டி, தும்மங்குறிச்சி ஆகிய 9 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பின்னர், இவை 14 வார்டுகளாக பிரிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

அப்போது வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, லத்துவாடி, காதப்பள்ளி, வீசானம் உள்ளிட்ட 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரூ.211 கோடியில் 9 ஊராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும், 50 சதவீத அளவிற்கு கூட பணிகள் முடிக்கப்படவில்லை. பல வார்டுகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான பைப்லைன் அமைக்கும் பணிகள் கூட இன்னமும் தொடங்கப்படவில்லை. சில வார்டுகளில் தோண்டப்பட்ட குழிகள் இன்னமும் மூடப்படவில்லை.

சாலை அமைக்கப்படவில்லை. இப்படி பல பிரச்னைகள் நிலவி வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்துவது தெடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகர மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணைமேயர் பூபதி முன்னிலை வகித்தார். இதில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள், பாதாள சாக்கடை அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும். மழைகாலம் துவங்கும் முன், தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும். சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

ஒரு வார்டில் பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே, அடுத்த இடத்தில் பணிகளை தொடங்க வேண்டும். பரவலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறுவதால், எந்த வார்டில் பணிகள் நிறைவு அடைந்துள்ளது. எந்தவார்டில் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற விபரம் தெரிவதில்லை. மாமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைப்படி பணிகளை, தனியார் நிறுவனத்தினர் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.கூட்டத்தில் பங்கேற்ற துணை மேயர் பூபதி பேசுகையில், `நாமக்கல் மாநகராட்சி, நகராட்சியாக இருந்த போது, இணைக்கப்பட்ட 9 ஊராட்சி பகுதிகளில், மொத்தம் 208 கி.மீ தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் தற்போது வரை, 98கி.மீ தூரத்திற்கு மட்டுமே பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது ஒரே குழுவாக 72 பணியாளர்கள் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை 3 குழுவாக பிரித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். எந்த வார்டிலும் பணிகள் தாமதம் இன்றி நடைபெறும் வகையில், பணிகளை விரைவுபடுத்த வேண்டும். வரும் மார்ச் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்கும் வகையில், திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, வாரந்தோறும் சம்பந்தப்பட்ட வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்,’ என்றார்.கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், டி.டி.சரவணன், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், தேவராஜன், பழனிசாமி, மாநகராட்சி உதவி பொறியாளர்கள் பிரகாஷ், ரவி ஆகியோர் கலந்து

கொண்டனர்.