Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொல்லிமலைக்கு மீண்டும் நேரடி பஸ் போக்குவரத்து

பரமத்திவேலூர், மார்ச் 2: பரமத்திவேலூரில் இருந்து கொல்லிமலைக்கு மீண்டும் நேரடியாக பஸ் இயக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கொல்லிமலைக்கு நேரடியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விளையும் விளை பொருட்களை விவசாயிகள் கொல்லிமலைக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கொல்லிமலைக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், விவசாயிகள் தங்களது விளை பொருட்களான வெற்றிலை, வாழை, வெல்லம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொல்லிமலைக்கு கொண்டு செல்வது முடங்கியுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக பரமத்தி வேலூரில் இருந்து கொல்லிமலைக்கு பஸ் போக்குவரத்து இல்லாததால், நாமக்கல் சென்று அங்கிருந்து கொல்லிமலைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், சுற்றுலா செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கொல்லிமலையில் இயற்கையாக விளைவித்த மிளகு, தேன், காபி, அரிசி, அன்னாசி, பலாப்பழம், மலை வாழைப்பழம், மூட்டு வலியை போக்கும் கிழங்கு வகைகள் நேரடியாக பரமத்திவேலூருக்கு ஒரே பஸ்சில் கொண்டு வரப்பட்டது. தற்போது, நேரடியாக பஸ் இல்லாதது மிகுந்த சிரமமாக உள்ளது.

இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும், துறை சார்ந்த நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பரமத்திவேலூரில் இருந்து மீண்டும் கொல்லிமலைக்கு நேரடியாக பஸ் போக்குவரத்தை மீண்டும் இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.