Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 86 மையங்களில் 19020 பேர் எழுதுகின்றனர்

நாமக்கல், மார்ச் 2: நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் இன்று(2ம் தேதி) பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தம் 19,020 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான அரசு பொதுத்தேர்வு இன்று(2ம் தேதி) துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு, அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் மற்றும் நலப்பள்ளிகள் உள்பட மொத்தம் 204 பள்ளிகளைச் சேர்ந்த 9382 மாணவர்கள், 9638 மாணவியர் என மொத்தம் 19020 மாணவ, மாணவியர் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 90 முதன்மை கண்காணிப்பாளர்கள்(மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்), 90 துறை அலுவலர்கள், 1200 அறை கண்காணிப்பாளர்கள், 15 வழித்தட அலுவலர்கள், 130 பறக்கும்படை உறுப்பினர்கள் ஈடுபடுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்று காலை 8 மணியளவில், அனைத்து தேர்வு மையங்களுக்கும் வினாத்தாள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. அனைத்து மையங்களுக்கும் காலை 8,45 மணிக்குள் வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும். இதனை கண்காணிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், மூத்த முதுகலை ஆசிரியர்களை கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்ப்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்வு கண்காணிப்பு அலுவலராக ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் முருகன் நியமிக்கப்படடுள்ளார். இவர் கடந்த வாரம் நாமக்கல் வந்து தேர்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்தார். காலை 10 மணிக்கு தேர்வு துவங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும். மாணவ, மாணவியர் வினாத்தாளை படித்து பார்க்க 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. தேர்வு பணிக்காக முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர் பணிக்கு அரசு பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படடுள்ளனர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பணி ஒதுக்கப்படவில்லை. நாமக்கல் ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என 3 மையங்களில் இந்த ஆண்டு விடைத்தாள் திருத்தப்படுகிறது. தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்கள் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு இந்த மையங்களில் வைக்கப்படும். பின்னர் அவை வேறு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு விடைத்தாள் திருத்தப்படும்.

இதே போல், வேறு மாவட்டத்தில் இருந்து இந்த மையங்களுக்கு விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். இந்த ஆண்டு முதல் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துவிட்டது. கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதும் மையங்களில், தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரியர் தேர்வுகள் நாளை(3ம் தேதி) துவங்குகிறது.