Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

நாமக்கல், ஜூலை 1: நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு கடந்த காலங்களை போல வெளிப்படை தன்மையுடன் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் இன்று (1ம் தேதி) அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொம்மம்பட்டி, எருமப்பட்டி அரசு மகளிர், புதுச்சத்திரம், பரமத்தி ஆண்கள், ஆர்.பட்டணம், வெண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களுக்கு மாறுதல் கேட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 27 தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு, உள் மாவட்டத்திற்குள் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிப்பதற்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதன்மை கல்வி அலுவலர் மாதவன் தலைமையில், மூத்த தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் கலந்தாய்வினை நடத்த நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள பள்ளிகளின் பட்டியல், கலந்தாய்வு துவங்குவதற்கு சற்று முன், இன்று காலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை(2ம் தேதி) தலைமை ஆசிரியர்களுக்கு, வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு, 3ம் தேதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, 4ம் தேதி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, 6ம் தேதி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெளி மாவட்டம் செல்லும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தொடர்ந்து முதுகலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு, மாறுதல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல், வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு என, இம்மாதம் 27ம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வின் போது, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆன்லைனில் வெளிப்படையாக காட்டப்பட்டன. இந்த ஆண்டு மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், குறைந்த பட்சம் ஒரு கல்வியாண்டு ஒரு பள்ளியில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை மாற்றப்பட்டு, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடமாறுதல் கேட்டு ஆசிரியர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். பொது கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆன்லைன் கலந்தாய்வின் போது, மாவட்டத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் காட்டப்பட்டால் ஆசிரியர்கள் விரும்பிய பள்ளிகளுக்கு இடமாறுதலில் செல்லமுடியும் என ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.