Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

1 முதல் 3-ம் வகுப்பு புதிய பாடநூல்கள் கற்பித்தல் சென்னையில் 4 நாட்கள் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

நாகர்கோவில், மே 7: ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் போதிக்க வசதியாக சென்னையில் ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026-2027 ம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் குறித்த மாநில அளவிலான புத்தாக்கப் பயிற்சியினை சென்னையில் நடத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வரும் கல்வி ஆண்டில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கும் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான பாடத் திட்டமிடுதல் மற்றும் கணினி வழி விளக்கக்காட்சி தயாரிக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஆசிரியர்களுக்கு இந்தப் புதிய பாடநூல்களைக் கொண்டு திறம்படக் கற்பிப்பது குறித்தப் பயிற்சியை வழங்க வேண்டியது அவசியமாகிறது.

இந்தப் பயிற்சி சென்னையை அடுத்த புனித தோமையார் மலை, டி.எம்.ஐ சர்வதேச மையத்தில் மே 19-ம் தேதி முதல் மே 22-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. அதன்படி, மே 19-ம் தேதி தமிழ் பாடத்திற்கும், மே 20-ம் தேதி ஆங்கிலப் பாடத்திற்கும், மே 21-ம் தேதி கணிதப் பாடத்திற்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இறுதி நாளான மே 22-ம் தேதியன்று அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளடக்கிய சூழ்நிலையியல் பாடத்திற்கான பயிற்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 8 கருத்தாளர்களும் 38 பங்கேற்பாளர்களும் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் கருத்தாளர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்கும் கருத்தாளர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பென்டிரைவ் கொண்டு வர வேண்டும் என்றும், அதில் கற்பித்தல் தொடர்பான விளக்கக்காட்சிகளை எடுத்துவர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், ஆசிரியர்களுக்கான இந்தப் பயணச் செலவுகள் மற்றும் இதர செலவினங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமே ஏற்கும் எனவும், இதற்கான முன்னேற்பாடுகளைச் சென்னை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.