Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரி மாவட்டத்தில் 5 ெதாகுதிகளிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி

நாகர்கோவில், மே 6: கன்னியாகுமரி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் பாரம்பரியமான செல்வாக்கு மிக்க தொகுதிகளிலும், நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கிய இடங்களிலும் அக்கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது .

குறிப்பாக, நாகர்கோவில் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, இந்த முறை திமுக வேட்பாளர் ஆஸ்டினிடம் வெற்றியைப் பறிகொடுத்தது மட்டுமன்றி, இரண்டாம் இடத்தையும் இழந்து மூன்றாவது இடத்திற்கு சென்றது. எம்.ஆர். காந்தி 52,355 வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோல்வியை தழுவினார். இங்கு தமிழக வெற்றி கழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்து பாஜகவை பின்னுக்குத் தள்ளியது.

அதேபோல், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த விஜயதரணி, விளவங்கோடு தொகுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே களமிறங்கினார். ஆனால் அங்கும் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் முதலிடத்தை பிடிக்க, தமிழக வெற்றி கழகத்தின் மைக்கேல் குமார் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். விஜயதரணி 45,604 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்லசுவாமி வெற்றி பெற்ற நிலையில், அங்கும் பாஜக வேட்பாளர் ரமேஷ் 44,293 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார். கிள்ளியூர் மற்றும் குளச்சல் தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு பின்னாலேயே பாரதிய ஜனதா கட்சி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. குளச்சலில் சிவகுமார் 54,384 வாக்குகளும், கிள்ளியூரில் நிவின் சைமன் 31,070 வாக்குகளும் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

மாவட்டத்தின் பெரும்பாலான தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது இடத்தை கூட தக்கவைக்க முடியாமல், புதிதாகக் களம் கண்ட தமிழக வெற்றி கழகத்திடம் அந்த இடத்தை பறிகொடுத்து மூன்றாவது இடத்திற்குச் சென்றிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளிலும் தாமரை மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.