Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகர்கோவிலில் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.265 ஆக உயர்வு: இஞ்சி ரூ.200-க்கு விற்பனை

நாகர்கோவில், ஜூன் 3: நாகர்கோவிலில் ஒரு கிலோ பூண்டு கிலோ ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது சாமானிய மக்களை பாதிக்க செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் காய்கறிகள் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. டீசல் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு அப்படியே தொடர்கிறது. சமையலில் மருத்துவக் குணத்திற்காகவும் மணத்திற்காகவும் அன்றாடம் பயன்படுத்தப்படும் இஞ்சி ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சியைப் போலவே பூண்டின் விலையும் மிக அதிகமாக உயர்ந்து ஒரு கிலோ 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி மற்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக கேரட் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், சமையலுக்கு மிக அவசியமான சின்ன வெங்காயம் (உள்ளி), கத்தரிக்காய் மற்றும் வழுதலங்காய் ஆகியவை தலா 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பீட்ரூட் மற்றும் சீனி அவரைக்காய் ஆகியவற்றின் விலை கிலோ 60 ரூபாயாக உள்ளது.ஓரளவு மிதமான விலையில் கிடைக்கும் காய்கறிகளைப் பொறுத்தவரை, தக்காளி மற்றும் சீனி கிழங்கு ஆகியவை கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காய் ஆகியவை 35 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. பெரிய வெங்காயம் (பல்லாரி) கிலோ 30 ரூபாய்க்கும், காய்கறிகளிலேயே மிகக்குறைந்த விலையாக வெள்ளரிக்காய் கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சி, பூண்டு, கேரட் மற்றும் சின்ன வெங்காயம் போன்ற காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் காய்கறிகளை வாங்கும் அளவைக் குறைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வரத்து குறைவு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.