மயிலாடுதுறை, ஆக. 21: மயிலாடுதுறையில் குறுவட்ட தடகளப்போட்டிகள் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவில் தடகள போட்டி நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் குமாரவேல், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சித்ராதேவி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் முன்னிலை வகித்தனர். முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் (இடை நிலைக்கல்வி) சாந்தி, தடகள போட்டியை தொடங்கி வைத்தார்.இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 27 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த 320 மாணவிகள், 440 மாணவர்கள் என மொத்தம் 760 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். 14 ,17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஓட்ட போட்டிகள் தடை தாண்டும் போட்டி உள்பட 16 போட்டிகள் நடந்தன. இதில் தங்களின் தனி திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் வரும் 24ம், 25ம் தேதியில் மாவட்ட அளவில் நடக்கும் போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்றனர். போட்டிகளை அரசு பெண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் லீலாவதி, சாருமதி, உடற்கல்வி இயக்குனர் அன்புக்கனி, உடற்கல்வி ஆசிரியர்கள் சௌபாரதி, ஆனந்தி, பிரேமாவதி மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.



