நாகப்பட்டினம், அக். 23: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அருகே கூக்ஸ் ரோடு மகளிர் கல்லூரி பிரிவு சாலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைக் கண்காணித்து தடுக்கவும் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை யாரோ அடித்து சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கண்காணிப்பு கேமிராவை சேதப்படுத்தியது வெளிப்பாளையத்தை சேர்ந்த வீரமணி(29), ஜெகதீஸ்வரன்(25) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேர் மீதும் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


