நாகப்பட்டினம், ஜூலை 18: நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாதிப்பாகுபடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகள் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாதிப்பாகுபடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தகுதிப்படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையும், அதனுடன் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதும் தமிழ்நாடு அரசு சிறப்பித்து வழங்கி வருகிறது.
இதனடிப்படையில் நடப்பு ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்தினையும், அதற்குரிய ஆவணங்களையும் கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது இவ்விருதிற்கான விண்ணப்ப படிவத்தை tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். மேலும் இப்படிவத்தினைப் பூர்த்தி செய்து வரும் 31ம் தேதிக்குள் நாகப்பட்டினம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


