நாகப்பட்டினம், அக். 15: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாகப்பட்டினத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் பணத்தைத் திரும்ப வழங்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உடனடியாகப் பணத்தைத் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தினர். மாவட்டம் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்தபடி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதில் பங்கேற்றுத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து கூட்டமைப்பினர் கூறுகையில், பணத்தை இழந்து 2 ஆண்டுகள் ஆகியும், பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகும் இதுவரை எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை. எனவே அந்த நிதிநிறுவனம் மீதான வழக்கை விரைந்து முடித்து, ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உரியத் தொகையை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


