கீழ்வேளூர், நவ.13: திருமருகல் அருகே கூரைவீடு தீயில் எரிந்து நாசமானது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி ( 65), விவசாயக் கூலி தொழிலாளி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று தனது வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து விட்டு பின்னர் நெருப்பை அணைக்காமல் மழையில் நனைந்துபோன விறகுகளை அடுப்பின் மேல்பரப்பி காய வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் அடுப்பில் இருந்த நெருப்பு சிறிது சிறிதாக பற்றி விறகு தீப்பிடித்து எரிந்ததில் கூரைக்கு தீ பரவிய கூரை முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை போராடி அணைத்தனர். ஆனால் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த கொத்தமங்கலம் விஏஓ திவாகர் நேரில் சென்று பார்வையிட்டார்.
