நாகப்பட்டினம், அக். 9: நாகப்பட்டினத்தில் தூய்மைப் பணியாளர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணியாக சென்றனர். நாகப்பட்டினம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 5ம்தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம் முதல் நகராட்சி அலுவலகம் வரை 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணியாக சென்றனர்.
சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் குருசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், மீனாட்சிசுந்தரம், முருகையன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ்கண்ணா, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சசிகலா, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுபாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


