கொள்ளிடம்,அக்.8: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி ஊராட்சி சிதம்பரநாதபுரம் கிராமம் பெரிய தெரு பகுதியில் அழிஞ்சியாறு சுற்றியுள்ள பகுதியில் விளைநிலங்களுக்கு மின் மோட்டார் களுக்கு மும்முனை மின்சாரம் செல்லும் மின் கம்பிகள் சென்று கொண்டிருக்கின்றன.
வயல் பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டிருப்பதால். விவசாயிகள் வயல் பகுதிக்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர். டிராக்டர் போன்ற உழவு எந்திரங்கள் வயலில் உழவு பணியில் ஈடுபடும் போது தொங்கிக் கொண்டிருக்கும் மின் கம்பி எந்திரத்தின் மீது பட்டு மின்சாரம் தாக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது.
இதனால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உழவு மற்றும் அறுவடை பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே தாழ்வான ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டுமென்று அப் பகுதி விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


