நாகப்பட்டினம், ஆக. 7: திருமருகல் அருகே நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தலையில் துண்டு போட்டு கொண்டு நெற்றியில் நாமம் அணிந்து தமிழக அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும்.
நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்த வேண்டும். கரும்புக்கான ஆதார விலையை டன்னுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இயற்கை சீற்றங்கள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத் தொகை அறிவிக்காத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



