நாகப்பட்டினம், ஆக.5: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றிய பருவகால பணியாளர்களை நிரந்தரம்செய்யக்கோரி நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பருவகால பணியாளர்கள் பணியிடங்களை தமிழக அரசு நிரந்தரம் செய்ய கோரி நுகர்பொருள் வாணிபக்கழக நாகப்பட்டினம் மண்டல அலுவலகம் முன்பு பொதுதொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மண்டல தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றிய பருவகால பணியாளர்களை தமிழக அரசு நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொருளாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.


