மயிலாடுதுறை, மே 4: மயிலாடுதுறையில் சிறுமி தற்கொலைக்கு காரணமான அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி மாணவி, வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சிறுமியின் தற்கொலைக்கு அவர் படித்த பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கார்த்திகேயன் தான் காரணம் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் கடந்த 29ந் தேதி கடலங்குடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து மணல்மேடு போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி படித்த பள்ளியின் ஆங்கில ஆசிரியரான தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மனக்குண்ணம் கீழ்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திகேயன் (42) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.



