வேதாரண்யம்,அக்.28: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் 3வது நாளாக ஐந்தாயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்கு செல்லவில்லை. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் காரணமாகவும், கடற்கரைப் பகுதிகளில் சூறைக்காற்று வீச கூடும் என்பதால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத் துறையினரின் அறிவிப்பை அடுத்து மீனவர்கள் கடலுக்கு மூன்றாவது நாளாக செல்லவில்லை. இதை அடுத்து நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் உள்ள வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், மணியன் தீவு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள 5,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் மீனவர்கள் மீன்பிடி வலைகள், படகு என்ஜின்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடுகளில் முடங்கிப் போய் உள்ளனர் ஒரு சில மீனவர்கள் தங்கள் வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீன் வளத்துறை அறிவிப்பு வந்தவுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல ஓரிரு நாட்கள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டுக்கான மழைக் கால நிவாரண தொகை வழங்குவதற்கக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே உடனடியாக அரச இந்த ஆண்டுக்கான மழைக்கால நிவாரணத் தொகையை வழங்கினால் தற்சமயம் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்ட இயலுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


