நாகப்பட்டினம்,நவ.3: நாகப்பட்டினத்தில் கல்லறைத் திருநாளை முன்னிட்டு முன்னோர்களின் கல்லறைகளை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இறந்த தங்களது உறவினர்களையும், முன்னோர்களையும் நினைவுகூர்ந்து, அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்யும் வகையில், கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் தனது முன்னோர்களின் கல்லறைகளை தூய்மை செய்து மலர்கள் வைத்து அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நடந்தது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்த சிறப்புத் திருப்பலியில், இறந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதை தொடர்ந்து, பேராலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்ட குருக்கள், துறவியர்கள் மற்றும் விசுவாசிகளின் கல்லறைகளிலும், தங்களது உறவினர்களின் கல்லறைகளிலும் கிறிஸ்தவர்கள் மலர்கள் வைத்து அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த கல்லறைத் திருநாள் நிகழ்வில், வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.


