நாகப்பட்டினம்,நவ.3: நாகப்பட்டினம் நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் பிரவீன்குமார் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், வகுப்பறைகளின் நிலை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், பள்ளி வளாகத்தின் தூய்மை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலில் கல்வி பயில்வதற்குத் தேவையான வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும், மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளியில் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள், மாணவர்களின் கல்வி முன்னேற்றம், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பிற அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும், பள்ளியில் சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினார். மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உறுதி செய்வதுடன், பள்ளி வளாகத்தைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பராமரிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தினார். சமையல் கூடத்தில் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் இருந்த மதிய உணவின் தரத்தினை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


