Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மகளிர் தொழில் முனைவோர் நேர்காணல் முகாம்

நாகப்பட்டினம், ஜூலை 30: நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் மற்றும் தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கும் நிறுவனம் சார்பில் மகளிர் தொழில் முனைவோரை தேர்ந்தெடுத்தல் நேர்காணல் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக தொழில்முனைவோர் வளர்ப்பு மற்றும் தொடக்க நிறுவன ஊக்குவிப்பு மையம், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த உயர்ந்த வளர்ச்சி திறன் கொண்ட மகளிர் தொழில்முனைவோரை கண்டறிந்து, அவர்களை தொழில்முனைவோராக உருவாக்கி, வளர்ச்சி அடைய தேவையான தொழில்நுட்பம், வழிகாட்டுதல், நிதி மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஊரக தொழில்முனைவோர் வளர்ப்பு மற்றும் தொடக்க நிறுவன ஊக்குவிப்பு மையம் மூலம் தொழில் வாய்ப்பு கண்டறிதல், தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள், தொழில் வளர்ப்பு, தொழில் பதிவு மற்றும் சட்டப்பூர்வ இணக்க நடவடிக்கைகள், நிதி, அறிவாற்றல், தொழில்நுட்ப மேம்பாடு, தயாரிப்பு புதுமை, பிராண்டிங், சந்தைப்படுத்தல், முதலீட்டாளர் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதரவு சேவைகள் வழங்கப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக ஜீன் மாதம் 25ம் தேதி நாகப்பட்டினத்தில் நடந்த மகளிர் தொழில்முனைவோர் பயிற்சி முகாமில் 200க்கும் மேற்பட்ட மகளிர் தொழில்முனைவோர் பங்கேற்றனர். இதில் 65 மகளிர் தொழில்முனைவோர் அடுத்த கட்ட தொழில்முனைவு வளர்ப்பு ஆதரவிற்காகத் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட் 65 மகளிர் நேற்று நேர்காணல் முகாமில் கலந்து கொண்டனர்.

இந்த நேர்காணவில் பங்கேற்ற கலெக்டர் பிரவீன்குமார் கூறியதாவது: இத்தேர்வு செய்யப்பட்ட தொழில்முனைவோரின் தொழில் திறன், வளர்ச்சி வாய்ப்பு மற்றும் தொழில்முனைவு திறன்களை மதிப்பிடும் தமிழ்நாடு ஊரக தொழில்முனைவோர் வளர்ப்பு மற்றும் தொடக்க நிறுவன ஊக்குவிப்பு மையம் தேர்வு நிகழ்வு நடந்தது. தமிழ்நாடு ஊரக தொழில்முனைவோர் வளர்ப்பு மற்றும் தொடக்க நிறுவன ஊக்குவிப்பு மையம் அமைப்பின் உள்நாட்டு நிபுணர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழில்முனைவு வளர்ப்பு மையங்கள், முதலீட்டாளர்கள், தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் சிறந்து விளங்கும் மகளிர் தொழில்முனைவோர் உள்ளிட்ட வெளிப்புற நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழு பங்கேற்று, வெளிப்படையான மற்றும் திறமையின் அடிப்படையிலான மதிப்பீட்டை மேற்கொண்டு,

மதிப்பீட்டின் முடிவுகளின் அடிப்படையில், தொழில்முனைவோர் அவர்களின் தொழில் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப முன் வளர்ப்பு , தொழில்முனைவு வளர்ப்பு அல்லது தொழில் விரைவாக்கம் பிரிவுகளில் இணைக்கப்பட்டு, தொடர்ச்சியான தொழில்முனைவு மேம்பாட்டு ஆதரவுகள் வழங்கப்படும். மேலும் ஊரக மகளிர் தொழில்முனைவோரை வலுப்படுத்தி, நிலையான தொழில் நிறுவனங்களை உருவாக்கவும், நீடித்த வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் தமிழ்நாடு ஊரக தொழில்முனைவோர் வளர்ப்பு மற்றும் தொடக்க நிறுவன ஊக்குவிப்பு மையம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். இந்த அரிய வாய்ப்பை ஊரக மகளிர் தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து, மகளிர் தொழில் முனைவோரை தேர்ந்தெடுத்தல் நேர்காணல் முகாமில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை கலெக்டர் பிரவீன் குமார் பார்வையிட்டார். வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் நாநிலதாசன், தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கும் நிறுவனம் திட்ட தலைவர் ஜெகன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.