Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்றைய போட்டி நிறைந்த உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திறன்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வது அவசியம்

நாகப்பட்டினம், செப். 28: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாகப்பட்டினம் செல்லூரில் உள்ள பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் 38 ஆயித்து 940 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். அதிகளவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை நாடி பதிவு செய்திருப்பது வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை வெளிப்படுத்தினாலும், இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

வேலைவாய்ப்பு முகாம்கள் ஒரு நாள் நடைபெறும் நிகழ்வாக மட்டும் கருதப்படக் கூடாது. வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் நிறுவனங்கள் என இரு முக்கிய தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் தளமாக இம்முகாம்கள் அமைகின்றன. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும், தொழில் நிறுவனங்களின் தேவைகளையும் ஒருங்கிணைத்து, கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும், திறமைக்கும் வாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இதுபோன்ற முகாம்களின் முக்கிய நோக்கமாகும். வேலை தேடும் இளைஞர்கள் தங்களது முதல் பணியிலேயே அதிக ஊதியம், குறைந்த பணிச்சுமை, வீட்டிற்கு அருகிலேயே பணியிடம் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், முதல் வேலை என்பது தொழில் வாழ்க்கையின் இறுதிப்புள்ளி அல்ல. நீண்டகால தொழில் பயணத்தின் முதல் படியாகும். எனவே முதல் வேலைக்குக் கிடைக்கும் ஊதியத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அதன் மூலம் கிடைக்கும் அனுபவம், கற்றல் வாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றையும் இளைஞர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோல், தொழில் நிறுவனங்களும் இளைஞர்களிடம் தொழில்நுட்ப அறிவு, பணித்திறன், பொறுப்புணர்வு, தகவல் தொடர்புத் திறன், குழுவாகப் பணியாற்றும் திறன் மற்றும் நிறுவனத்தின் நோக்கம் மற்றும் இலக்குகளுக்கு பங்களிக்கும் திறன் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றன. சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கூடுதல் நேரம் அல்லது விடுமுறை நாட்களில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். இவற்றை விமர்சனமாக பார்க்காமல், புதிய திறன்களையும் அனுபவத்தையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே, கல்வித் தகுதி என்பது வேலைவாய்ப்புக்கான அடிப்படைத் தகுதி மட்டுமே. தொடர்ந்து திறன்களை வளர்த்துக் கொள்வதே முக்கியம். கல்லூரியில் சிறந்த மாணவராக இருப்பது மட்டும் போதுமானதல்ல. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் மற்றும் தங்களது முழுத் திறனை வெளிப்படுத்தும் முயற்சி ஆகியவை இளைஞர்களுக்கு அவசியம்.

கல்வி முடிந்தவுடன் கற்றலை நிறுத்திவிடக் கூடாது. வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொண்டு, புதிய அறிவையும் திறன்களையும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய போட்டி நிறைந்த உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திறன்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வது அவசியம். காலத்திற்கு ஏற்ப தங்களை மறுவடிவமைத்துக் கொள்ளாத பல நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்துள்ளன. எனவே, இளைஞர்களும் புதிய தொழில்நுட்பங்களையும் திறன்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள், நேர்முகத் தேர்வில் நிறுவனங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் வழங்கும் பின்னூட்டங்களை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களிடம் எந்தத் திறன் குறைவாக உள்ளது என்பதை அறிந்து, அடுத்த ஆறு மாதங்களில் அந்தத் திறனை மேம்படுத்திக் கொண்டு மீண்டும் வேலைவாய்ப்பைத் தேட வேண்டும். இதுவே தொழில் வளர்ச்சிக்கான சரியான அணுகுமுறையாகும்.கடந்த 10 ஆண்டுகளில் 235க்கும் மேற்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் முக்கியமான சாதனையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நிவாசன், மண்டல இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு) அருணகிரி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) நானிலதாசன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுபா, மற்றும் அரசு பலர் கலந்துகொண்டனர்.