அஞ்சலக வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காடு சிறப்பு முகாமில் 400 கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சை
வேதாரண்யம், செப். 28: வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காடு ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கலையரசி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் தெட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் மற்றும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போன்ற பல்வேறு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் 400க்கும் மேற்பட்ட கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள் அழைத்து வந்து பயன்பெற்றனர். முகாமில் கால்நடை மருத்துவர்கள் செந்தில், சரவணகுமார், நந்தினி, கால்நடை ஆய்வாளர் மாசிலாமணி, பராமரிப்பு உதவியாளர் செல்வி, தமிழரசி, ஊராட்சி செயலாளர் பிரபாகரன், கால்நடை வளர்ப்போர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
