Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கவில்லையா? ஒன்றிய அரசு பங்களிப்புடன் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை கிடைக்காது

நாகப்பட்டினம், செப். 28: வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத பயனாளிகளுக்கு ஒன்றிய அரசு பங்களிப்புடன் உள்ள மாதாந்திர உதவித்தொகை பெற இயலாது என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகைத் திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளி உதவித்தொகைத் திட்டம் உள்ளிட்ட ஒன்றிய அரசு பங்களிப்புடன் உள்ள மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும். எனவே இம்மாதம் மாதாந்திர உதவித்தொகை கிடைக்கப்பெறாத பயனாளிகள் உடனடியாக தங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு சென்று வங்கி கணக்குடன் ஆதார் எண்ணினை இணைக்க வேண்டும்.

இது தொடர்பாக பயனாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை கலைவதற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் இயங்கி வரும் தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்புத் திட்ட பிரிவில், உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண்.8ல் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்ட பிரிவில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் செயல்படும்.

மேலும் செப்டம்பர் மாத உதவித்தொகை வராத பயனாளிகளுக்கு அவரது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணினை இணைக்க இயலாத நிலையில் உள்ள பயனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடாக நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, அஞ்சலகம் மூலம் வங்கி கணக்கு எண் துவங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் இதர உதவித்தொகை பெறும் பயனாளிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அருகாமையில் உள்ள அஞ்சலகங்களுக்கோ அல்லது வருவாய்த்துறை மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்களுக்கோ சென்று அஞ்சலக வங்கி கணக்கு எண் துவங்கி கொள்ளலாம். இதற்கு பயனாளியின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை பயனாளிகள் அலைபேசி அல்லது குடும்ப உறுப்பினரது அலைபேசி எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.