குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி போலியோவை அறவே ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: முன்னேற்பாடு கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்
நாகப்பட்டினம், ஜூன் 26: குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி போலியோவை அறவே ஒழிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த முன்னேற்பாடு கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி காலை 7 மணி முதல் 5 மணி வரை அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கிடும் முகாம் நடைபெற உள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், அனைத்து வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 28ம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு களப்பணியாளர்கள் மூலம் வாயிலாக முகாம் அன்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் கிராமப்புறங்களில் 39 ஆயிரத்து 379 குழந்தைகளும், நகர்புறங்களில் 10 ஆயிரத்து 731 குழந்தைகளும் என மொத்தம் 50 ஆயிரத்து 114 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இம்முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோவை அறவே ஒழிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். டிஆர்ஓ பவணந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குநர் பிரதீப் கிருஷ்ணகுமார் மற்றும் அரசு பலர் கலந்து கொண்டனர்.


