கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம் செய்து டெங்கு, வைரல் காய்ச்சல் பரவாமல் தடுப்பது ஒவ்வொருவரின் கடமை
நாகப்பட்டினம், செப். 25: கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம் செய்து பொதுமக்கள் பகலிலும் கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று மக்கள் தொடர்பு முகாமில் நாகப்பட்டினம் கலெக்டர் பிரவீன்குமார் அறிவுறுத்தி உள்ளார். திருமருகல் அருகே வவ்வாலடி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுயதொழில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.38,334 மதிப்பில் வங்கி கடனுதவிக்கான காசோலை, 1 பயனாளிக்கு ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 400 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, தோட்டக்கலைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.75,392 மதிப்பில் மண்புழு உரத்தொட்டி, நுண்ணீர் பாசன குழாய்கள், வேளாண் வனவியல் கன்று , சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 12,மதிப்பில் திருமண உதவித்தொகை மற்றும் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலை, வருவாய் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்து 24 ஆயிரத்து 500 மதிப்பில் கணிணியில் பதிவேற்றம் செய்த பட்டா, வட்ட வழங்கல் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.3,813 மதிப்பில் வேளாண் இடுபொருள்கள், நெல் நுண்ணூட்டம், உயிர் உரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.6,690 மதிப்பில் தையல் இயந்திரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5 ஆயிரத்து 782 மதிப்பில் எல்.பி.ஜி சலவை பெட்டி என மொத்தம் 43 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 90 ஆயிரத்து 911 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரவீன்குமார், எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆகியோர் வழங்கினர்.


