கொள்ளிடம்,செப்.23: கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்காலை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் உள்ளது. இது அப்பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வசதி அளித்து வருகிறது. இந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டு ஒரு வருடம் ஆன நிலையில், மீண்டும் தூர்வாரப்படாமல் விடப்பட்டதால் வாய்க்காலில் புதர் மண்டி காணப்படுகிறது.
பாசனத்திற்கு தண்ணீர் வரும் நிலையில் நிலங்களுக்கு இதன் வழியே தாராளமாக தண்ணீர் சென்று பாய்வதில் சிரமம் ஏற்படும். இந்த பாசன கிளை வாய்க்காலை தூர் வாராமல் இருந்தால் வரப்போகும் பருவமழையின் போது நெற்பயிரில் தேங்கும் அதிகப்படியான மழை நீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் நெற்பயிர் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே போர்க்கால அடிப்படையில் குன்னம் பாசன மற்றும் வடிகால் கிளை வாய்க்காலை தூர்வாரி ஆழ் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


