Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நாகப்பட்டினத்தில் இருந்து பழனி வழியாக போத்தனூருக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும்: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம், ஜூன் 23: யாத்ரீகர்களின் வருகையை அதிகரிக்க நாகப்பட்டினத்தில் இருந்து பழனி வழியாக போத்தனூருக்கு பகல் நேர ரயில் சேவையை தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோயில், எட்டுக்குடி முருகன் கோயில் என ஆன்மீக தலங்கள் நிறைந்துள்ளது. காரைக்கால் பகுதியில் சனீஸ்வரர் கோயில் உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இதை தவிர நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியில் சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளதால் குடும்பத்தோடு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இதனால் வேளாங்கண்ணியில் தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் பிட் லைன் மற்றும் ஸ்டேபிள் லைன் அமைக்கப்படவுள்ளது. மேலும் தஞ்சாவூரில் இருந்து காரைக்கால் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே டெல்டா மாவட்டத்தில் வேளாங்கண்ணி ரயில்வே நிலையம் முக்கிய இடத்தை பெற உள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து புதிய ரயில் சேவையை தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரன் கூறியதாவது: நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் சமீபத்தில் நடைமேடைகள் புதுப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் பெட்டி நிலை அறிகுறி பலகைகள் மற்றும் பயணிகள் தகவல் காட்சி அமைப்புகள் இல்லாததால் பயணிகள் தங்கள் பெட்டிகளை கண்டறிவதில் சிரமப்படுகின்றனர். எனவே அவற்றை விரைவில் நிறுவ வேண்டும். ரயில் எண் 11017 (மும்பை காரைக்கால் எக்ஸ்பிரஸ்) காரைக்கால் ரயில் நிலையத்திற்கு வசதியான நேரத்தில் வந்தடைகிறது. ஆனால் ரயில் எண் 11018 புறப்படும் நேரத்தை இரவு 8.00 மணியாக மாற்ற வேண்டும். அப்பொழுது தான் நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு பகுதி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், அதிகரித்து வரும் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு இந்த ரயிலை வாரத்திற்கு இரண்டு முறை இயக்க வேண்டும்.

ரயில் எண் 16529 (காரைக்கால் பெங்களூரு எக்ஸ்பிரஸ்) நேரத்தை மாற்றி திருவாரூர் சந்திப்பில் ரயில் எண் 56835 (மயிலாடுதுறை காரைக்குடி பயணிகள் ரயில்) உடன் இணைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். வேளாங்கண்ணி மற்றும் சென்னை இடையே தினசரி பகல் நேர விரைவு ரயில் சேவை தொடங்க வேண்டும். யாத்ரீகர்களின் வருகையை அதிகரிக்க நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர், திருச்சிராப்பள்ளி-பழனி, பொள்ளாச்சி, - கிணத்துக்கடவு வழியாக- போத்தனூருக்கு பகல் நேர ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். கீழ்வேளூர் ஒரு தாலுகா தலைமையிடம், ஒன்றிய தலைமையிடம் மற்றும் முக்கிய வேளாண்வணிக மையமாக உள்ளது.

எனவே அனைத்து தகுதியான பயணிகள் மற்றும் விரைவு ரயில்களுக்கும் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். வேளாங்கண்ணியில் இருந்து -மயிலாடுதுறை, கடலூர், விருத்தாச்சலம்,-சேலம் வழியாக பெங்களூரு வரை புதிய இரவு நேர விரைவு ரயில் சேவையை தொடங்க வேண்டும். ரயில் எண் 76826-தற்போது திருவாரூர் சந்திப்பில் முடிவடைகிறது. எனவே இந்த ரயிலை நாகப்பட்டினம் வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் நாகப்பட்டினம் பகுதி பயணிகள் அதிகாலை நேரத்தில் திருச்சிராப்பள்ளி மற்றும் பிற முக்கிய இடங்களுக்கு எளிதாக பயணம் செய்ய முடியும். இவ்வாறு ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரன் கூறினார்.