மயிலாடுதுறை ஆக, 20: மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினரால் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, விதிகளை மீறிய 168 வாகன உரிமையாளர்களிடமிருந்து ரூ. 2,44,500/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் காந்த், தகவல்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், 01.08.2026 முதல் 17.08.2026 வரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டு வருவதாலும், சாலை பாதுகாப்பில் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததால் விபத்துக்கள் நடைபெறுவதால் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குழுவினருடன் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தணிக்கையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் முதல் ஆட்டோ ரிக்ஷா, டூரிஸ்ட் டாக்ஸி, வேன் பேருந்துகள், லாரிகள், கார்களில் கண்சுகம் முகப்பு வினக்குகள் பொருத்தப்பட்டு இயக்கப்பட்ட 141 வாகனங்களுக்கு அபராதம் ரூ. 70,500/- விதிக்கப்பட்டு மேற்படி முகப்பு விளக்குகள் அகற்றப்பட்டன. மேலும், பொதுமக்களும் இது போன்ற கண் கூகம் முகப்பு விளக்குகளை பொருத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட கலெக்டர் காந்த், தலைமையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் அபாயகரமாக தங்கிச் செல்வது குறித்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு 22 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் கதவுகள் அமைத்து பயணிகளை பாதுகாப்பான முறையில் அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. முதலமைச்சர் தனி பிரிவிற்கும் மற்றும் மாவட்ட கலெக்டருக்கும் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு 19 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பொதுமக்களிடம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டது.
01.08.2026 முதல் 17.08.2026 வரை நடைபெற்ற வாகன தணிக்கையின் போது 168 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அவற்றில் பரமிட், எப்சி. ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ், சாலை வரி போன்றவை நடப்பில் இல்லாத 29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு, சாலை வரியும் வசூலிக்கப்பட்டது. இது போன்று வாகனத்தனிக்கையின் போது சாலை விதிகளை மீறி இயக்கப்பட்ட மொத்தம் 168 வாகனங்களிடம் இருந்து சாலை வரியாக ரூ.37,935/-ம், அபராதமாக ரூ.2,44,500/-ம் வசூலிக்கப்பட்டது. இணக்க கட்டணமாக ரூ.3.82300/46 நிரணயம் செய்யப்பட்டது.
எனவே, மாவட்டத்தில் விபத்துகளை குறைத்திடும் வகையில், பேருந்துகளில் படிக்கட்டு பயணம் தவிர்க்கவும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் (ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், இருசக்கர வாகளத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது எனவும், மது போதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது எனவும், வாகனங்களில் தேவையற்ற கண் கூகம் முகப்பு விளக்குகள் பொருத்தக் கூடாது எனவும் அதேபோல் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஹாரன்கள் பொருந்த கூடாது எனவும் வாகனத்திற்கு தேவையான பதிவுச் சான்று இன்சூரன்ஸ் டிரைவிங் லைசன்ஸ் ஆகியன நடப்பில் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும் எனவும். போக்குவரத்து வாகனங்களுக்கு ஆர்சி புக் பர்மிட் இன்சூரன்ஸ் டேக்ஸ் டிரைவிங் லைசன்ஸ் ஆகியன நடப்பில் இருக்குமாறு வைத்துக்கொண்டு பொதுச் சாலையில் சாலை விதிகளை கடைபிடித்து விழிப்புணர்வுடன் வாகனத்தை இயக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் காந்த் தெரிவித்தார்.
இந்த வாகன தணிக்கையின் போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கதிர்வேலு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் மற்றும் பலர்.



