Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேளாங்கண்ணி ஆலய பெருவிழாவை முன்னிட்டு 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு: கலெக்டர் தகவல்

நாகப்பட்டினம்,ஆக.20: வேளாங்கண்ணி ஆலய பெருவிழாவை முன்னிட்டு 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம், 300 இடங்களில் சிசிடிவி கேமராக்ககள் அமைத்து கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில் ஆண்டு பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். கேழ்கர் சுப்ரமண்ய பாலசந்திரா, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் பிரவீன்குமார் பேசியதாவது: புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 7ம் தேதி தேர் பவனி நடக்கிறது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 14ம் தேதி எஸ்பி, பேராலய நிர்வாகிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, வேளாங்கண்ணியில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், பொதுமக்கள், மீனவர் சமுதாயத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து, திருவிழாவை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதுடன், மாவட்டத்தை நம்பி வருகை தரும் பக்தர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாகும். காவல் துறையின் சார்பில் 4 எஸ்பிக்கள் , 2432 காவலர்கள், 378 போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1 காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. 15 கண்காணிப்பு கோபுரங்கள், 300 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 3 ட்ரோன்கள் மூலம் வேளாங்கண்ணி பகுதி முழுவதும் கண்காணிக்கப்படும்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுகாதார துறையின் மூலம் 7 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள், மருத்துவ பணியில் 21 மருத்துவர்கள், 52 சுகாதார ஆய்வாளர்கள், 21 செவிலியர்கள் உள்ளிட்ட 94 பணியாளர்கள் மருத்துவ முகாம்களில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர். 3 இருசக்கர வாகன அவசர ஊர்திகள், 10 அவசர கால ஊர்தி நிறுத்தப்படவுள்ளன, 12 தீயணைப்பு துறைவாகனங்கள் நிறுத்தப்பட உள்ளது. கடற்கரையில் 5 நபர்கள் கொண்ட குழு 2 படகுகளில் சுழற்சி முறை ஆய்விற்கு உள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான படகு மூலம் 6 எண்ணிக்கை உள்ளுர் நீச்சல் வீரர்களை கடலில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளபட உள்ளனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா காலத்தில் வழங்கப்படும் குடிநீரினை குளோரினேற்றம் செய்வதற்கு 40 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி பேராலய நிர்வாகமும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதுடன், திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா பக்தர்களின் பாதுகாப்புடனும், எவ்வித இடையூறும் இன்றியும் சிறப்பாக நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். இதை தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் உள்ள புனித பவுல் மற்றும் புனித பீட்டர் வாகன நிறுத்துமிடம், கழிவறை, புனித பேராலய பகுதிகள் மற்றும் கொடியேற்றும் இடம் உள்ளிட்டவைகளை கலெக்டர்

பிரவீன்குமார் ஆய்வு செய்தார்;.

வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ், நாகப்பட்டினம் ஆர்டிஓ வருவாய் சங்கர நாராயணன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், டி எஸ்பி நிக்சன், வட்டார போக்குவரத்து நெடுஞ்செழியபாண்டியன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் பிரபாகரன் அவர்கள், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.