Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கீழ்வேளூர் அருகே அத்திப்புலியூரில் கிடப்பில் போடப்பட்ட சாலைமேம்படுத்தும் பணி

கீழ்வேளூர், ஜூலை 20: கீழ்வேளூர் ஒன்றியம் அத்திப்புலியூரில் கடந்த 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப்பணியால் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் அத்திபுலியூர் - சேமங்கலம் சாலையில் அத்திபுலியூர் பைபாஸ் சாலையில் இருந்து அத்திபுலியூர் ரயில்வே லைன் வரை சுமார் 700 மீட்டர் ஊராட்சி ஒன்றிய சாலையை கடந்த 6 மாதத்திற்கு முன்பு சீரமைக்கும் பணி தொடங்கியது. இதையடுத்து கருங்கல்தூள் மற்றும் கருங்கல் ஜல்லி கலந்த கலவை கொண்டு சாலை மேம்பாட்டு பணி தொடங்கியது. சாலை அமைக்கும் பணி நடைபெற்று 6 மாத காலமாக தார்சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பைக்கில் செல்பவர்கள் ஜல்லிகளால் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் சாலையில் உள்ள கருங்கல் ஜல்லி தூள்கள் காற்றில் பறந்து வீட்டிற்குள் பரந்து உண்ணும் உணவிலும் மண் துகள்கள் கலந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் நாகை மாவட்ட கலெக்டர், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நேரிலும் வலியுறுத்தி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகமும், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கிடப்பில் ேபாடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.