குவிந்து வரும் பாராட்டு சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்தை முறைப்படுத்தி பணி காலமாக ஆணை வழங்க வேண்டும்
நாகப்பட்டினம், ஆக. 19: சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக் காலமாக முறைபடுத்தி ஆணை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் கோட்ட பொறியாளர் மூலமாக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் நேற்று நடந்தது.
மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் சதாசிவம், ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சாலைப்பணியாளர்களில் உயிர்நீத்தோரின் குடும்பத்தில் இருந்து விண்ணப்பம் செய்தோருக்கு கருணை அடிப்படையில் விரைந்து பணி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிக் காலமாக முறைபடுத்தி ஆணை வழங்கவேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்துவிட்டு கிராமப்புற இளைஞர்களை சாலைப் பணியாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் செய்து ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நெடுஞ்சாலைத் துறை நாகப்பட்டினம் கோட்ட பொறியாளர் ராஜேஷ்கண்ணாவிடம் கொடுத்தனர்.




