நாகப்பட்டினம், ஜூலை 17: நாகப்பட்டினம் ரயில்நிலையத்தின் 165வது ஆண்டு நிறைவு விழா இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் நாகப்பட்டினம் ரயில்வே நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இணை செயலாளர் ராஜராஜன், பொருளாளர் கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு காரைக்கால்-எர்ணாகுளம் விரைவு ரயில் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், நாகப்பட்டினம் ரயில் நிலைய மேலாளர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.1861-ம் ஆண்டு கட்டப்பட்ட நாகப்பட்டினம் ரயில்நிலையத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கூரை பல புயல், மழை மற்றும் வெள்ளப் பேரிடர்களையும் தாங்கி துருப்பிடிக்காமல் 165 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. எனவே அதை வரலாற்றுச் சின்னமாக தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ், பொருளாளர் உலகநாதன், நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நலச்சங்க தலைவர் மோகன், நாகப்பட்டினம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பாசஞ்சர் அசோசியேசன் செயலாளர் அரவிந்த்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement

