மயிலாடுதுறை, ஆக. 14: 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினம் வருகின்ற நாளை(15ம்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ரயில்வே ஏடிஜிபி உத்தரவின் பெயரில் மயிலாடுதுறை மாவட்டம் எஸ்எஸ்ஐ பிரபாகரன் மற்றும் தலைமை காவலர் செல்வேந்திரன் உள்ளிட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை வெடிகுண்டு நிபுணர் குழு மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், ரயில் நிலைய பார்சல் பகுதி, நுழைவாயில் மற்றும் அனைத்து பிளாட்பாரங்களிலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் ரயில்களில் உள்ளே ஏறி கேட்பாரற்று பார்சல் ஏதாவது கிடந்தால் அதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். ரயில் நிலையம் முன்பு உள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆட்டோக்கள் ஆகியவற்றையும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு சென்னை மற்றும் திருச்சி, திருவாரூர் ஆகிய மார்க்கங்களில் தினந்தோறும் 25க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும் நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



