Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மயிலாடுதுறை கோமல் பகுதியில் இரண்டாக பிளந்து ஆற்றுக்குள் சரிந்து விழுந்த நெடுஞ்சாலை

குத்தாலம், ஆக. 14: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கோமல் பகுதியில் தரங்கம்பாடி - கும்பகோணம் நெடுஞ்சாலையில் திடீர் என மண் சரிவு ஏற்பட்டு சாலை இரண்டாக பிளந்து ஆற்றுக்குள் சரிந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடியில் இருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் ஆடுதுறை முதல் மங்கநல்லூர் வரையிலான 16 கிமீ நீளத்தில் சாலை மேம்படுத்தும் பணி மேற்கொள்ள நெடுஞ்சாலைதுறையினரால் திட்டமிடப்பட்டது. இதற்காக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 16 கிமீ நீளத்திற்கு தொடர்ந்து மூன்று மாத காலமாக சாலை மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கோமல் பகுதியில் இந்த நெடுஞ்சாலையையொட்டி வீரசோழன் ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றை ஒட்டி நெடுஞ்சாலை செல்லும் பகுதியில் 20 நாட்களுக்கு முன்பாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சாலையின் கீழ் உள்ள மண் சரிந்து சாலை இரண்டாக பிளந்து சரிந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு முழுவதுமாக விரிசல் ஏற்பட்டு சாலையானது இரண்டாக பிளந்து, உடைந்து ஆற்றுக்குள் சரிந்துள்ளது.சாலை விரிசல் ஏற்பட்டு விழுந்ததால் கும்பகோணம் முதல் தரங்கம்பாடி வரை செல்லும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனம், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இருசக்கர வாகனம் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினரும், மாவட்ட போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு உரிய வழிகாட்டுதலுக்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதன் காரணமாக அரசு, தனியார் பேருந்து மற்றும் வேன், கார் ஓட்டுநர்கள் வழிதெரியாமல் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வைத்தனர்.சாலை சரிந்து ஆற்றுக்குள் விழுந்ததை தொடர்ந்து, மேலும் சரிவு ஏற்படாத வகையில் 2 பொக்ளைன், புல்டவுசர் இயந்திரங்களின் உதவியுடன் சீரமைக்கும் பணி தொடங்கியது.

இது குறித்து கோமல் பகுதி பொதுமக்கள் கூறுகையில்:தரங்கம்பாடியில் இருந்து கும்பகோணம் சென்று வர இருந்த ஒரு சாலையே உள்ளது. மாற்றுப்பாதை என்பது இல்லை. அவ்வாறு செல்ல வேண்டும் என்றால் கோமல், கொத்தங்குடி, நத்தம்பாடி வழியாகதான் செல்ல வேண்டும். அதுவும் அனைத்து வாகனமும் செல்ல முடியாத அளவிற்கு அவையெல்லாம் கிராம சாலைகள். எனவே பொதுமக்களின் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் உடனடியாக கோமல் பகுதியில் ஏற்பட்ட சாலை சரிவை ஆய்வு செய்து, ஒப்பந்ததாரர்கள் அனைவரையும் அழைத்து போர்கால அடிப்படையில், இந்த சாலை பணியை முடித்து தரவேண்டும். இந்த விஷயத்தில் கலெக்டர் நேரடியாக வந்து ஆய்வு செய்து வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதற்கு வழிவகை செய்து தர வேண்டும். ஏதேனும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் இந்த சாலை பணிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும்.இந்த சாலை பணிகளை போர்கால அடிப்படையில் துரிதமாக செய்யாமல் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் செய்தால் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு கோமல் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.