Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடியம்பாளையம், கோட்டைமேடு தீவு கடற்கரை கிராமங்கள் சுற்றுலா தலமாக்கப்படுமா?

கொள்ளிடம், ஜூலை 13: கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் மற்றும் கோட்டைமேடு ஆகிய தீவு கிராமங்களை சுற்றுலாத்தலமாக்கும் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கொடியம்பாளையம் கடற்கரை கிராமத்தில் படகுத்தளத்துடன் மற்ற மீனவர்கள் மீன் விற்பனை செய்வதற்கான வசதிகள் சென்ற திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன. கொள்ளிடம் ஆறு கொடியம்பாளையம், கோட்டைமேடு மற்றும் பழையாறு கடற்கரைக்கு இடைப்பட்ட முகத்துவாரப் பகுதியில் வங்கக் கடலோடு கலக்கிறது. கொள்ளிடம் ஆறு கலக்கும் பகுதி அருகே திட்டுப் படுகைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒரு திட்டு பகுதிதான் வரலாற்று சிறப்புமிகு கோட்டைமேடு கிராமம் ஆகும். கொடியம்பாளையம் தீவு கடற்கரை கிராமம் ஆகும்.

இந்த கிராமங்கள் ஒருபக்கம் வங்கக்கடல் மறுபக்கம் கொள்ளிடம் ஆற்றின் பகுதி கிராமங்களை சூழ்ந்து உள்ளது. இந்த கிராமங்களை சுற்றிலும் அலையாத்தி காடுகள் பசுமையாக நிறைந்து காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் படகு மூலம் இப்பகுதியை சுற்றிப் பார்த்து செல்கின்றனர். இதில் கோட்டைமேடு கிராமம் கடந்த சுனாமியின் போது அங்கிருந்து மக்கள் அனைவரும் வெளியேறி விட்டதால் வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு வசித்தவர்களின் வீடுகள் இடிந்து காணப்படுகின்றன. அங்கு இயங்கி வந்த துவக்கப்பள்ளி இன்றும் அப்படியே இருந்து வருகிறது. அங்கே இருந்த காளியம்மன் கோயில் என்றும் அழகு மாறாமல் இருந்து வருகிறது. மக்கள் அறவே வசிக்காத கோட்டைமேடு கிராமத்தையும் சுற்றுலாத்தலமாக மாற்றினால், கோட்டைமேடு தீவு கிராமம் மீண்டும் புது பொலிவு பெறும். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் கடந்த வருடம் கொடியம்பாளையம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் வைத்து அரசின் கொள்கை முடிவிற்கு அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2025ம் ஆண்டு சுற்றுலாத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் கொடியம்பாளையம் தீவு கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில் மணற்கடற்கரை, படகு குழாம், காத்திருப்போர் கட்டிடம், சாலை வசதிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் கழிவறைகள் அமைப்பது தொடர்பாக தொடர்புடையதுறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து அதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு கொடியம்பாளையம், கோட்டைமேடு தீவு கிராமங்களை சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்திற்கான நடவடிக்கையை இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்த கொடியம்பாளையம் மற்றும் கோட்டைமேடு ஆகிய இயற்கை எழில் சூழ்ந்த தீவு பகுதிகளை சுற்றுலா தலமாக மாற்றுவதன் மூலம் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு சென்று வருவதால் சுற்றுலாத்துறைக்கு போதிய வருவாய் ஏற்படுவது உடன், அந்தத் திட்டு கிராம பகுதிகள் மேலும் சிறப்பாக பாதுகாக்கப்படும். எனவே கொடியம்பாளையம் மற்றும் கோட்டைமேடு ஆகிய கிராம பகுதிகளை சுற்றுலாத்தலமாக மாற்றும் திட்டத்தை உடனடியாக துவங்கி நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.