Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கொள்ளிடம் பகுதியில் லாபம் தரக்கூடிய மரவள்ளி சாகுபடி குறையும் அவலம் அரசு நேரடி கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

கொள்ளிடம்,ஆக.12: கொள்ளிடம் பகுதியில் அதிக லாபம் தரக்கூடிய பயிரான மரவள்ளி சாகுபடி காலமாற்றத்தினால் மறைந்து வருகிறது. எனவே அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி கடைமடை பகுதியாக இருந்து வருகிறது. இங்கு பிரதான சாகுபடியாக குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சாகுபடி இருந்து வருகிறது. மேலும் வாழை, கரும்பு, மா, பலா, கத்திரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட தோட்ட பயிர்களும் குறிப்பிட்ட நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கிய தோட்டபயிர் சாகுபடியான மரவள்ளி கிழங்கு சாகுபடி கடைமடை பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. ஆனால் கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் சுமார் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் புகுந்து விட்டதால் ஆற்றின் கரையை ஒட்டிய கிராமங்களில் காலம் காலமாக பயிரிடப்பட்டு வந்த மரவள்ளி சாகுபடி மிகவும் குறைந்துள்ளது. மரவள்ளி சாகுபடி செய்வதற்கு ஏற்ற பகுதியாக கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதி மிகவும் செழிப்பாக இருந்து வந்தது. இதனால் இங்கு மரவள்ளி சாகுபடி தீவிரமடைந்து வந்தது. இது அனைத்து பருவங்களிலும் வளரக்கூடிய 8 முதல் 12 மாதங்களில் அறுவடைக்கு வரக்கூடிய ஒரு தோட்ட பயிராகும்.

இது குறித்து கொள்ளிடம் அருகே ஆற்றின் கரையோர நிலப் பகுதியில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயி, சௌந்தர்ராஜன் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றின் கரையோர நிலப்பகுதி மரவள்ளி சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாகும். கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் புகுந்து விட்டதால் நிலத்தடிநீரும் ஆற்றின் கரையோர நிலமும் உவர் நிலங்களாக மாறிவிட்டன. இதனால் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் பகுதிக்கு மட்டும் சுமார் 2000 ஏக்கரில் மரவள்ளி சாகுபடி நடைபெற்றது. ஆனால் தற்போது குறைந்து வெறும் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் அதிகம் திறக்கப்பட்டால் கரையோரம் சாகுபடி செய்துள்ள மரவள்ளி செடிகளையும் கிழங்குடன் தண்ணீர் அடித்துச் சென்றுவிடுகிறது. இதுவும் மரவள்ளி சாகுபடி ஆற்றின் கரையோர பகுதியில் குறைவுக்கு காரணமாக இருந்து வருகிறது. மரவள்ளி சாகுபடி ஒரு லாபம் தரக்கூடிய பயிராகும்.

இதனை மீண்டும் தொடர்ந்து பயிரிடும் வகையிலும் நிலப்பரப்பை அதிகப்படுத்தும் வகையிலும், விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கி உதவி செய்யவும், அறுவடை செய்த மரவள்ளி கிழங்குகளை அரசு நேரடியாக கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் குறைந்து போன மரவள்ளி சாகுபடி மீண்டும் கொள்ளிடம் பகுதியில் வளர்ச்சி அடையும் என்றார்.