நாகப்பட்டினம், ஆக. 12: நாகப்பட்டினம் நகராட்சியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை கண்டித்து நாகப்பட்டினம் திருவாரூர் சாலை கோட்டைவாசல் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகப்பட்டினம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இப்பகுதி கடலோரப் பகுதி என்பதால் நிலத்தடி நீர் உவர்ப்பு நீராக மாறி, குடிநீராகப் பயன்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. இதனால் திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரி மற்றும் ஒதியத்தூர் நீரேற்று நிலையங்களில் இருந்து குழாய் மூலம் நாகப்பட்டினம் நகராட்சிக்குக் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் கடுமையான வெப்பம் காரணமாக ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததுள்ளது. இதன் காரணமாக நீரேற்று நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, நாகப்பட்டினம் நகராட்சி முழுவதும் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 33வது வார்டு அக்கரைகுளம் வடக்கு, அண்ணா நகர், நடராஜர் பிள்ளை தெரு மற்றும் 27 வது வார்டு திரௌபதியம்மன் கோவில் தெரு, தீமிதி திடல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்கக் கோரி நாகப்பட்டினம் திருவாரூர் சாலை கோட்டைவாசல் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது. பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாகக் குடிநீர் கிடைப்பதற்கான பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்திய அதிகாரிகள் உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்



