நாகப்பட்டினம், செப்.8: திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் ஊராட்சியில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற சாலைமறியலில் காலிகுடங்களுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம், திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீர் கடந்த ஒரு மாதமாக விநியோகம் செய்யவில்லை. இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம்-கும்பகோணம் நெடுஞ்சாலை திருப்புகலூரில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். இந்த சாலைமறியல் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது கடந்த ஒரு மாத காலமாக ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், திருக்கண்ணபுரம் வருவாய் ஆய்வாளர் குமுதா மற்றும் வருவாய் துறையினர், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

