Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகை மாவட்டத்தில் முந்திரி போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்

நாகப்பட்டினம், ஜூன் 8: நாகப்பட்டினம் மாவட்டத்தில் முந்திரி கொட்டைக்கு போதுமான விளைச்சல் இல்லாததால் முந்திரி விவசயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீண்ட தூர கடலோர கிராமங்களை கொண்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் முந்திரி சாகுபடி பிரதானமாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பொய்கைநல்லூர், பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, நாலுவேதபதி, செம்போடை, வேதாரண்யம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நடப்பு ஆண்டில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் தாக்கத்தால் பெரும்பாலான முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்து பெரும் பாதிப்புகுள்ளானது.

இந் நிலையில் தப்பி பிழைத்த முந்திரி மரங்களில் மீண்டும் முந்திரிகள் காய்க்க தொடங்கியது.பொதுவாக முந்திரி தை, மாசி மாதத்தில் பூ பூத்து வைகாசி, ஆனி மாதங்களில் காய்த்து அறுவடை க்கு வரும். நடப்பாண்டை பொறுத்தவரை பூ பூக்கும் மாதமான தை மற்றும் மாசி மாதங்களில் அதீத பனி மற்றும் பருவம் தப்பிய மழையால் பூக்கள் உதிர்ந்தும், கருகியும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் தப்பிய முந்திரிகள் பூச்சி தாக்குதல் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் கொட்டைகள் கருப்பு நிறத்திலும், அளவில் சிறியதாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு முந்திரி கொட்டை விலை ஒரு கிலோ 70 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் நடப்பாண்டு கிலோ 110 முதல் 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை முந்திரி விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை என்றாலும் விலைஅதி கரித்துள்ள நிலையில் போதுமான விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒரு மரத்தில் தோராயமாக 10 கிலோ கிடைக்க வேண்டிய இடத்தில் 2 கிலோ மட்டுமே முந்திரி கொட்டைகள் கிடைப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். எனவே தமிழக அரசு முந்திரி விவசாயிகளின் நலன்கருதி முந்திரியை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையிலான தொழிற்சாலைகளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்படுத்தித் தர வேண்டும். முந்திரி மரங்களுக்கு காப்பீடு செய்யும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.