நாள் ஒன்றுக்கு 30 சரக்கு ரயில்களில் இருந்து பறந்து வரும் நிலக்கரி துகள்களால் பாதிக்கப்படும் நாகை பொதுமக்கள்
நாகப்பட்டினம், செப். 7: நாகூர் அருகே தனியார் துறைமுகத்தில் கையாளும் நிலக்கரியால் பாதிக்கப்படும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நாகப்பட்டினத்தில் நடத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகூர் அருகே தனியார் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்து இருந்தாலும் இந்த துறைமுகத்தில் கையாளப்படும் நிலக்கரியால் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 25 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி ரயில்வே வேகன்கள் மூலம் அரியலூர், பரங்கிப்பேட்டை, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 30 முறை நிலக்கரியை ஏற்றி செல்ல சரக்கு ரெயில் வேகன்கள் செல்கிறது.
இவ்வாறு ரயில்வே வேகன்கள் செல்வதால் அதில் இருந்து கீழே சிதறும் நிலக்கரி துகள்கள் தண்டவாளங்களில் படிந்து விடுகிறது. இதை தூய்மை செய்வதற்காக மாதத்தில் 10 நாட்கள் பயணிகள் ரயில் நிறுத்தப்படுகிறது. இது மட்டும் இன்றி இந்த தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இருப்பு வைக்கப்படுவதால் காற்றின் மூலம் நிலக்கரி துகள்கள் பரவி நாகூர், பனங்குடி, முட்டம், திருமருகல், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் ஆகியோருக்கு சுவாச பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் வீடுகளில் நிலக்கரி துகள்கள் படிந்து வீடுகளின் நிறம் மாறிவிடுகிறது. இவ்வாறு தனியார் துறைமுகம் நிலக்கரி கையாள்வதால் அதிக அளவில் பாதிக்கப்படுவது நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள்.
ஆனால் வரும் 9ம் தேதி கருத்துகேட்பு கூட்டம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் டிஆர் பட்டினத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்துகிறது. எனவே நாகப்பட்டினம் மாவட்டத்திலும் கருத்துகேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தமிழ்தேச மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மணிபாரதி கூறியதாவது:நாகூர் அருகே தனியார் துறைமுக விரிவாக்க திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வரும் 9ம் தேதி புதுச்சேரி மாநில மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் காரைக்கால் மாவட்டம் டிஆர் பட்டினத்தில் நடத்தப்படுகிறது.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அந்த தனியார் துறைமுகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு கையாளப்படும் நிலக்கரியின் அளவை பல மடங்கு உயர்த்துவதற்காக நடத்தப்படுகிறது. ஏற்கனவே இந்த துறைமுகத்தில் இருந்து ரயில் மற்றும் கனரக வாகனங்கள் வாயிலாக எடுத்து செல்லப்படும் நிலக்கரி துகள்கள் வாயிலாக நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதியை சேர்ந்த மக்கள் அதிக பாதிப்பு அடைகின்றனர். எனவே காரைக்கால் மாவட்டத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது போல் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். தற்போது 2 கோடியே 15 லட்சம் டன் நிலக்கரி கையாள்வதை 10 கோடியே 30 லட்சம் டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்கள் மூலம் நாள் ஒன்றுக்கு தற்போது 25 ஆயிரம் டன் நிலக்கரி எடுத்து செல்லப்படுகிறது. இதை தவிர கனரக வாகனங்கள் வாயிலாகவும் எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு நிலக்கரி எடுத்து செல்வதால் அதன் துகள்கள் காற்றில் பறந்து நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்கள். எனவே நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்கள் கருத்துக்களையும் கேட்க வேண்டும். இதை விட்டு காரைக்கால் மாவட்டத்தில் பாஜக அரசு ஆட்சியில் இருப்பதால் தனியார் துறைமுகம் வைத்திருப்பவர் அந்த கட்சியை சேர்ந்தவர் என்ற காரணத்தால் காரைக்கால் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி பொதுமக்கள் எதிர்ப்பு இல்லை என எளிதாக சான்றுகள் பெற நினைப்பதை கைவிட வேண்டும்.
நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தனியார் துறைமுகத்தில் நிலக்கரி கையாளும் திறன் அதிகரிப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் நாகப்பட்டினம் மாவட்டம் வழியாக நிலக்கரி எடுத்து செல்வதை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

