பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கூட்டம்: விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது; நாகை கலெக்டர் திட்டவட்டம்
நாகப்பட்டினம், செப். 7: விநாயகர் ஊர்வலம், சிலைகளை கரைத்தல் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 14ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விநாயகர் சிலைகள் நிறுவுதல், வழிபாடு, ஊர்வலம் மற்றும் நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தலுக்கு ஏதுவாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த தூய களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நிறுவ வேண்டும். சிலைகளை நிறுவுவதற்கு துறை சார்ந்த அலுவலர்களிடம் உரிய அனுமதி மற்றும் தடையின்மைச் சான்று பெற வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் மின்சார பாதுகாப்பு, தீத்தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.
ஒலிபெருக்கிகளை அரசின் விதிமுறைகளின்படி பூஜையின்போது காலை, மாலை வேளைகளில் 2 மணி நேரம் மட்டுமே சதுர வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும்.ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவை வரம்பை மீறி செயல்படக்கூடாது.விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் ஏற்பாட்டாளர்கள் சிலையின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் 2 தன்னார்வலர்களை நியமித்து அவர்களின் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும். காவல்துறையால் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலையை வாகனங்களில் கொண்டு செல்லவும், ஊர்வலம் எடுத்துச் செல்லும் போது பட்டாசுகள் வெடிக்க அனுமதி கிடையாது. சிலை ஊர்வலத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊர்வலப் பாதையில் உள்ள மரக்கிளைகள், மின்கம்பிகள் உள்ளிட்ட தடைகளை முன்னதாகவே அகற்றி, பாதுகாப்பான பாதையை ஏற்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் நீச்சல் வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்புகள் மற்றும் போதிய மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களில் கழிவுகள் மற்றும் பூஜைப் பொருட்கள் நீர்நிலைகளில் கலக்காத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சிலைகள் கரைக்கப்பட்ட பின்னர், பூஜை பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை தனித்தனியாக சேகரித்து முறையாக அகற்ற வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாகப்பட்டினம் நகராட்சி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சிலை நிறுவப்படும் இடங்களில் அவசர மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையிலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நடைபெற வேண்டும் என்றார்.எஸ்பி கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா, ஆர்டிஓக்கள் சங்கரநாராயணன், கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) அரங்கநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மோகனசுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

